Wednesday, June 23, 2010

தியானம் - 1

எல்லாருக்கும் ஒரு பெரிய வணக்கம். திரும்ப இந்த வலைப்பூ வழியா எல்லாரையும் சந்திக்கிறது மிக்க மகிழ்ச்சிங்க. ரொம்ப நாளா எதுவும் எழுதாம இருக்கியேன்னு தலைல கொட்டுன நல்ல உள்ளங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க.

ரொம்ப நாளா எல்லாரும் எதிர்பார்த்திருந்த ராவணன் ஜீரத்தில இருந்து மீண்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். இப்ப அத ஓவர்டேக் பண்ணி செம்மொழி மாநாடு ஆரம்பிச்சிருச்சு. எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க. எந்தவொரு மாநாடு, பண்டிகை, பொதுக்கூட்டத்துக்கு போனாலும் நேரம் இருந்தா, தவறாம விழா முடிஞ்ச அடுத்த நாளும் நான் அங்க ஆஜர் ஆயிடுவேன். அப்ப அந்த இடத்த பாத்தீங்கன்னா சும்மா போர் முடிஞ்ச யுத்த களம் எஃபெக்ட் அப்படியே இருக்கும். கொஞ்சம் அப்படியே காலார நடந்து போனிங்கன்னா வைங்க, என்னன்னமோ தோணும். :-)

சரி மேட்டருக்கு வருவோம்.

தியானம் பண்றதோட அடிப்படை என்ன? (அடிப்படையா தியானம்னா என்னான்னு கேக்குறவங்க எல்லாம் ஒன் ஸ்டெப் பேக்... உங்களுக்கு அப்பால கடைசியா சொல்றேன்). ஏதாவது சிக்கலான கேள்வி வந்துட்டா யாருக்கும் புரியாத ஜென் கதை சொல்லணும்னு, ஒலகத்தில இருக்குற எல்லா சாமியாருங்களுக்கும் தெரியும். நான் கொஞ்சம் புரியுற மாதிரி சொல்ல ட்ரை பண்றேன்.

ஒருநாள் ஒரு ஜென் குரு வகுப்பெடுத்துக்கிட்டு இருக்கும் போது, ஒரு இளம்துறவி அவர்கிட்ட இதே கேள்விய கேக்குறாரு. "எனக்கு ஒரு சந்தேகம் குருவே. தியானத்தினுடைய அடிப்படை என்பது என்ன?". அதுக்கு அவரு குரு சொன்ன பதில் 'கவனித்தல்'. நம்ம இளம் துறவிக்கு அந்த பதில் சரியாப் படல. அதனால திரும்ப கேக்குறாரு, "கவனித்தல் பற்றி நான் கேக்கவில்லை குருவே. தியானத்தின் அடிப்படையான அம்சம் பற்றித் தெரிந்து கொள்ளவே கேட்டேன்". இதற்கும் குரு சொன்ன பதில். "கவனித்தல், கவனித்தல் மற்றும் கவனித்தல். இதுதான் அடிப்படை அம்சம்".

நான் இந்த ஜென் கதையக் கேட்டப்ப, அந்த இளம் துறவி வகுப்ப கவனிக்காம வேற எதையோ யோசிச்சு கேள்வி கேட்டதாலதான் அந்த குரு கவனிக்குறதப் பத்தி சொல்றாறோன்னு தோணுச்சு. ஆனா உண்மையாவே தியானம் கவனிக்குறதுலதான் இருக்கு. ஆனா எதை கவனிப்பது?

"கண்னை மூடி உங்க மூச்சுக்காற்றை கவனிங்க". அப்புறம் "எதிரில் எரியும் விளக்கின் சுடரை கவனிங்க". எத்தனையோ யோகா வகுப்புகள்ல இதையேதான் திரும்பத்திரும்ப சொல்றாங்க. அதுக்கப்புறம் ஈசியா ஒன்னு சொல்வாங்க "மனதை ஒருநிலைப்படுத்துங்கள்". இவங்க இது இரண்டுக்கும் இடைல விடுற டைம் கேப்பு ரொம்ப கம்மி. நானும் பேக்கு மாதிரி அரை மணிநேரம் உக்காந்து கொஞ்சம் முதுகு வலியோட எத்தனையோ தடவை எழுந்திருச்சு வந்திருக்கேன். ஆனா அவங்க சொல்ல வர்ற "ஒருநிலைப்படுத்துதல்" பத்தி எனக்கு சுத்தமா ஒன்றும் புரியல.

பொதுவா தியானத்தில சொல்லப்படுற கவனித்தல் அப்படிங்கறது, நாம அப்ப இருக்கிற நிலையிலேயே ரொம்ப "நெருக்கமாக கவனித்தல்"னு பொருள்படும். இந்த நெருக்கமாக கவனித்தல் அப்படிங்கிறது வேற ஒன்னுமில்லை "உணர்தல்" தான் அது.

நமக்கும் இந்த உலகத்துக்கும் இருக்குற தொடர்பு நாம எதையாவது உணரும்போது தான் புரிய ஆரம்பிக்குது. உதாரணமா நாம கண்னைத் திறந்து பார்த்தாதான் எதிர்ல இருக்குற பிகர் தெரியும். உண்மையாகவே நாம அதை பார்க்கல. நம்ம கண்ணுதான் அத உணருது. வெளிய இருக்குற மொத்த வெளிச்சமும் நம்ம கண்ணுக்குள்ள பிரதிபலிச்சு அதை கண்ணு உள் வாங்கி நாம ஒரு காட்சியா பாக்குறோம். ஆனா நமக்கு அதுல பர்டிகுலர் பிகர் மட்டும் தெரியுதுன்னா அதை நாம உணர்றோம். (இங்க பிகர் அப்படிங்கிறத தப்பா நினைச்சவங்க எல்லாம் தலைல கொட்டிக்குங்க... இது, அது இல்ல...). ஏறக்குறைய இது ஒரு "நெருக்கமாக கவனித்தல்" போன்ற செயல்.

சுருக்கமா ஐம்புலன்கள்தான் நாம இந்த உலகத்தோட கொண்டிருக்கிற தொடர்பு. கண், காது, மூக்கு, நாக்கு அப்புறம் உடல் (இது தோல்பகுதி மட்டும்தான்). இந்த ஐந்து புலன்கள், எல்லா உயிர்களுக்கும் இருக்கு, ஆறாவதா எக்ஸ்ட்ரா ஒன்னு நமக்கு இருக்குறது மனசுதான். இப்போ நீங்க ஒரு பொருளப் பாத்தீங்கன்னா அத உங்களோட ஈசியா தொடர்பு பண்ணிப் பாக்குறது மனசுதான். உடனே உங்களுக்கு அது பத்தின நிறைய விசயங்கள் ஞாபகத்துக்கு வரும். ஒரு சத்தம் கேட்டீங்கன்னா அத உடனே ஏற்கனவே நீங்க கேட்ட சத்தங்களோட தொடர்பு படுத்திப் பார்க்குறது மனசுதான். அரைநொடி கூட இல்லாத வேகத்துல உங்க மனசு அது என்ன சத்தம்னு சொல்லிடுது.

இந்த புலன்கள் மூலமா நீங்க உணர்வது எல்லாமே சின்ன வயசுல இருந்து சாதாரணமா டெவலப் ஆன ஒன்னு. இதுதான் நமக்கு Presence of Mind உருவாக்குது. சாதாரணமா நீங்க உணர்றது எல்லாத்தையுமே மூளைல ரெக்கார்ட் பண்ணிகிட்டே போறது Receptive State of Mind மூலமாத்தான். நாம எல்லாத்தையுமே ஆழமாக உணர்வது இல்லை. இப்போ உங்களோட கல்யாண தேதிய யாராவது கேட்டா உடனே சொல்லிடுவீங்க. நீங்க முதன்முதலா யூஸ் பண்ண மொபைல் நெம்பர் என்னன்னு கேட்டா யோசிப்பீங்க. உங்களுக்கு ரெண்டுமே தெரியும் ஆனா ஆரம்ப நிலை பதிவாகத்தான் மொபைல் நெம்பர் உங்க மனசுல பதிஞ்சிருக்கும். அதனாலதான் நெம்பர யோசிச்சு சொல்வீங்க.

மனசப் பத்தி சொல்லணும்னா இன்னும் நிறைய சொல்லலாங்க. நீங்க கடைசியா பச்சமூங்கில் மரத்தப் பத்தி எப்ப நினைச்சீங்கன்னு உங்களால சரியா சொல்ல முடியாது. ஆனால் நீங்க இன்னும் ஒரு மணிநேரத்துக்கு பச்சமூங்கில்மரத்த நினைக்கக் கூடாதுன்னு நான் சொன்னா... நினைக்காம இருக்க முடியுங்களா?... இந்த நேரத்துல உங்க பின் மண்டைல உங்க கூட வேலை செய்யுற ஒருத்தரு நங்குன்னு கொட்டுனா, அவர் கூட சண்டை போட்டுகிட்டே நிச்சயமா பச்சமூங்கில் மரத்த மறந்துடுவீங்க.:-)

சரி....

தியானம்னா நெருக்கமாக கவனித்தல்னு ஒருவிதமா ஏறக்குறைய புரிஞ்சிகிட்டு இருப்பிங்கன்னு நினைக்கிறேன். எதை கவனிக்குறது? ஏன் கவனிக்குறதுன்னு எல்லாம் அடுத்தடுத்த பதிவுல பாக்கலாம்.

தியானம்னா என்னான்னு கேட்டவங்களுக்கு...

அதாவது சாமி.... தியானம்னா ஒரு வகையில ஆழம் பாக்குறதுதான். நம்ம பாடில இருக்குற பார்ட்சுங்களுக்கு அதோட வேலைய விட நிறைய வேலை தெரியும். ஆனா நம்ம மனசுதான் அதை கவனிக்குறது இல்லை. அத கவனிக்க வைக்குறதுக்குதான் தியானம். ஏறக்குறைய உண்மையான ஆழம் யாருக்கும் இன்னும் தெரியாது. நாமும் கொஞ்சம் காலை விட்டுப் பாப்போமே. அப்புறம் மனசை ஒருநிலைப்படுத்துறது, குவிக்கிறது, கவுக்குறது... இதுக்கெல்லாம் அப்பால இன்னும் நிறைய மேட்டர் இருக்குதாம். காசா... பணமா... அதையும் பாக்கலாம்... 

Saturday, November 21, 2009

அறிமுகம்

தியானம்

தளர்வாக சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளுங்கள். முதுகுத்தண்டு நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கைகளை தொடையின் மீது வைத்து, கண்களை மூடி நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த முயற்சி செய்யுங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள்.

இதுதான் தியானத்தின் அறிமுகம் என்றால் நானும் இந்தியாவின் பன்னிரண்டு லட்சத்து எழுபதாயிரத்து முன்னூற்று இருபத்திரண்டு சாமியார்களுள் ஒருவனாகி விடுவேன். (போலிச்சாமியார்களையும் சேர்த்து).

தியானம்-உடலையும், மனதையும் கட்டுப்படுத்த, வலிமையாக்க ஒரு எளிய கருவி.
இந்தக்கருவியை ஆப்பரேட் பண்ண கத்துக்கறது கொஞ்சம் சிரமம். ஆனா இதோட பயன்கள் ரொம்ப எஃபெக்டிவ்வா இருக்கும்.

எல்லாம் சரி எங்க இருந்து ஆரம்பிக்கிறது.
கொஞ்சம் அடிப்படையா போய் தெரிஞ்சிக்கலாமா?

என்னதான் வானம், பூமி, மலைன்னு குதிச்சாலும் தியானத்துக்கு அடிப்படை நம்ம மனசும். உடலும்தான். மனமும் உடலும் ஒத்து செய்யிற எல்லா செயல்களுமே ஏறக்குறைய தியானம்தான்.

மனசு தவளை மாதிரி தவ்விக்கிட்டே இருக்கும்றதாலயும், மனசு இருந்தாலும், உடம்பு ஒத்துழைக்காம தியானம் செய்யிறது கஷ்டம்றதாலயும் முதல்ல உடம்ப பத்தி தெரிஞ்சுக்கலாம்.

அறிமுகம் – உடல் அடிப்படை – (பதிவு 1)

ஒரு உடலை உருவாக்கி உருவம் தருவது மில்லியன் கணக்கான செல்கள்தான்னு எல்லாருக்குமே தெரியம். கண்டிப்பா, செல் படம் வரைஞ்சு பாகம் குறிக்காம யாரும் பத்தாவது பாஸ் பண்ணமுடியாதுன்ற நிலமை இன்னிக்கு வரைக்கும் தொடருது.

சின்னச் சின்ன மணல் துகள்களைவைத்து கட்டிடம் கட்டுவது போல, அந்த சிறு சிறு செல்களால்தான் இவ்வளவு பெரிய உடல் உருவாக்கப்பட்டுள்ளது. செல்கள் மணல்துகள்களை விட மிகச்சிறியதாய் இருப்பதால் அவற்றை மைக்ராஸ்கோப் மூலம் மட்டும்தான் பார்க்க முடியும்.“ஒவ்வொரு நொடியிலும் நம் உடலில் இலட்சக்கணக்கான செல்கள் இறக்கின்றன. புதிதாய் தோன்றுகின்றன. நம் புறத்தோலில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு 30000 முதல் 40000 செல்கள் வரை இறந்து, உதிர்ந்து விழுகின்றன.”


சாதாரணமாக ஒரு செல் உருண்டை வடிவத்தில் இருந்தாலும், அசையும் போது விரல்போல நீண்டும், சில சமயம் தன்னோட உடலை உள் இழுத்தும் இடத்திற்கு இடம் மாறுபடும். ஒரு பக்கம் விரல் போன்ற நீட்சிகளினால் உணவை உள்ளிழுத்தும் மறுபுறம் கழிவுகளை வெளித்தள்ளியவாறும் செயல்படும்.

ஒரு செல் இரண்டாகப் பிரிந்து புதிய செல்லை தோற்றுவிக்கும்போது, முதலில் நடுவிலுள்ள நியூக்ளியஸ் (Nucleus) குரோமோசோம் அமிலங்கள் இரண்டாகப் பிரியும். அப்புறம் நியூக்ளியஸ் பிரியும், இறுதியாக வெளிப்புற சுவர் இரண்டாக பிரிந்து இரண்டு செல்களாக மாறும்.

உலகத்திலுள்ள உயிர்களின் முதல் முன்னோர் அமீபா பத்தி உங்களுக்கு தெரியுமா ? (ஹி… ஹி… இதுவும் பத்தாங்கிளாஸ் மேட்டர்தான்). அந்த ஒருசெல் உயிரினம் இருக்கிற ஒரு சொட்டு தண்ணிய மைக்ராஸ்கோப்ல பாத்தா, அது அங்கிட்டும், இங்கிட்டும் நகர்றத பாக்கலாம். அதோட உணவா ஒருசில கிருமிகளை விழுங்கும், அதோட கழிவுப்பகுதியையும் கழிக்கும். அப்புறம் இரண்டா பிரிஞ்சு இரண்டு அமீபாவா மாறிடும் (இனப்பெருக்கம்). அந்த ஒரு சொட்டு தண்ணியோட ஒரு சைடுல கொஞ்சம் ஆசிடு கலந்து பாத்தா அமீபா வேக வேகமா இன்னோரு பக்கம் நீந்தி போறத பாக்கலாம். இந்த நுண்ணியிரிக்கு கூட போஷாக்கு வேணும், ஆக்ஸிஜன் வேணும்னு இதிலிருந்து தெரிஞ்சிக்கலாம்.

ஏறக்குறைய இது மனித செல்லை போலவே செயல்படுது. மனித செல்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருந்தா நம்ம உடலை உருவாக்க முடியாது. ஒரு டைப்பான செல்கள் எலும்புகளை உருவாக்குகிறது, இன்னொன்று சதைகளை உருவாக்குகிறது, இன்னுமொன்று இதயம், நுரையீரல், குடல், கண், காது, சருமம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான செல் கூட்டங்கள் இருக்கு.

இந்த செல்கள் தாமாகவே ஒன்று சேர்ந்து உடல் உருவத்தை செய்து முடிக்கிறது.

இவ்வளவு பெரிய இன்டர்நேஷனல் பில்டிங் காண்ட்ராக்டுக்கு பிளான் போட்டது யாரு??

செல்லுக்கு நடுவுல இருக்குற நியூக்ளஸில தான் இந்த பிளானோட மேட்டரே இருக்கு. நியூக்ளஸ்-குள்ள குரோமோசோம்னு ஒன்னு இருக்கு. அதுக்குள்ள ஜீன்ஸ் அப்படின்ற ஒருசில பகுதிகள் இருக்கு. இந்த ஜீன்ஸ்தான் செல்லோட அமைப்பை தீர்மானம் செய்யுது.

உதாரணமா ஒருசில உறுப்பு தரைத்தளம் போல இருக்கு. தோல் ஒரு பரந்த ஏரியா. இதுல ஒன்னுமேல ஒன்னா செல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கு. அடியில் உருண்டைய இருக்கும் செல்கள், மேலே போகப்போக தகடு மாதிரி உருப்பெற்றும், அதுக்கும் மேலே ஈரம் நீங்கிய துகள் மாதிரியும் உருவாகியிருக்கு. நுரையீரலில் உள்ள செல்கள் மிக நுண்ணியமாக காற்று கடந்து செல்லும் அளவிற்கு சன்னமானவை. குடலில் உள்ள செல்கள் கனசதுரமானவை, இதில் நீர்ப்பகுதி அதிகம். ஏரியாக்கு ஏரியா ஜீன்ஸ் தேவைக்கு ஏற்றாப்போல செல்களை உருவாக்குகிறது.
அப்புறம், வெறும் மணலை குமிச்சு வைச்சு பில்டிங் கட்ட முடியுமா?. பேஸ்ட்டு, சிமெண்டு வேணுமில்ல. செல்களை தாங்கி நிக்குற அணுக்கள் கடினமான நரம்பு போல அமைஞ்சிருக்கும். இதுதான் பில்டிங்ல சிமெண்ட் பண்ற வேலய பண்ணுது. எலும்பையும், தசையையும் பிரியாம ஒட்ட வைக்குது. இதை இங்கிலிபீசுல connective tissue அப்படின்னு சொல்வாங்க. ஒரு சில இடத்துல செல்களை சுருங்கியும், விரியவும் வைக்குது (நுரையீரல், தோல்). இதுவும் உடலில் உள்ள முக்கிய அடிப்படை தன்மை. செல் வேலை செய்ய கரண்ட் வேணுமே. அதை உற்பத்தி செய்ய எரிபொருள் (சர்க்கரை) எரிச்சு சாம்பலை (தண்ணீர், கார்பன்-டை-ஆக்சைடு, உப்புகள்) வெளிய தள்ளிடும் (அமீபா போல).

இந்த சிக்கலான ரசாயன மாற்றத்தை ஏ.டி.பின்னு சொல்றோம். இதுதான் ஒவ்வோர் உயிருக்கும் அடிப்படை சக்தியா இருக்கு ATP (Adenosine Tri Phosphate). தேவைக்கு ஏத்தாப்புல ஏ.டி.பி. சிறு சிறு துண்டுகளாவும் பிரிஞ்சு செயல்படுது.

இந்த உலகத்திலுள்ள எல்லா பாலூட்டிகளோட செல்களனைத்தும் ஒரே பரிமாணத்தில்தான் இருக்கின்றன.

அப்புறம் எப்படி ஒன்னு திமிங்கலமாவும், இன்னோன்னு மனிதனாவும் உருவாகியிருக்கு??

இதுக்கு பேருதான் படைப்பு.

அந்த படைப்புக்கு இன்னோரு பேரு டி.என்.ஏ. :-)இவருதான் எல்லா செல்களுக்கும் Top Level Management. ஒவ்வொரு செல்லும் என்ன பண்ணணும். எதை தயாரிக்கணும், எதை ஒதுக்கணும்னு இவருதான் கட்டளை போடுகிறார். DNAவை ஒரு சிற்பிக்கு ஒப்பிடலாம். அதோட வேலையே இந்த பெரிய வாழ்க்கைய டிசைன் பண்றதுதான். ஆனாலும் top level management, அப்படின்றதால அந்த வேலைய அது செய்யாது அதோட அசிஸ்டன்ட் ஆர்.என்.ஏ கிட்ட விட்டுடும். RNA, DNA சுருள்களை அழுத்தி அதுல இருக்கிற டேட்டாவ காப்பி பண்ணிக்கும். அப்புறம் அதோட டாங்குவேஜிக்கு மாத்தி வேல செய்ய ஆரம்பிக்கும். உதாரணமா, 20 டைப்பான அமினோ அமிலங்களை எடுத்து கம்பில மணி கோர்குற மாதிரி கோர்த்து இதய செல்களையும், தசைகளையும் உருவாக்குகிறது. இதேபோல உடலிலுள்ள எல்லா செல்களும் உருவாக்கப்படுது.குறிப்பிடத்தகுந்த ஒரு விதிவிலக்கு நம்ம மூளைதான். நாம பிறக்கும் போதே நம்ம வாழ்நாள் முழுசுக்கும் தேவையான அளவு மூளைச் செல்களோட பிறக்கிறோம். தேய்ஞ்சு போன, ரிப்பேர் ஆன செல்கள் அனைத்தும் மடிஞ்சு போயிரும். அதுக்கு பதிலா புது செல்கள் உருவாவதில்லை.

ஒரு செல் 600 வகையான என்சைம்களை உருவாக்க கூடிய ஒரு உற்பத்திக்கூடம். ஆர்.என்.ஏ சொல்றமாதிரி கேட்டு எப்போ எது வேணுமோ அதை உருவாக்கி புரதங்களை தொகுக்குது.

உதாரணமா நாம வாயில போடுற ஒரு மீன் துண்டிலுள்ள புரதத்தை எடுத்து, துண்டு துண்டா உடைச்சு, அமினே ஆசிடுகளா மாத்தி, கட்டை விரலுக்கு கொஞ்சமாவும், கிட்னிக்கு கொஞ்சமாகவும் மனித புரதமாக மாற்றி கொடுக்கிறது.

செல்லினுடைய என்சைம்கள் சிக்கலான ஹார்மோனையும், நோய் எதிர்க்கும் சக்தியையும் உடலில் கட்டுகின்றன.

செல்லின் மேல் உறை ஒரு சிக்கலான துணைப்பொருளாக உள்ளது. அது கேட் வாட்ச் மேனா வேலை செஞ்சு எத உள்ள வர அனுமதிப்பது, எதை ஒதுக்குவது என தீர்மானிக்கிறது, சமவிகித உப்பு, சர்க்கரை, நீர் இன்னும் எவ்வளவோ பொருட்களை செல்லில் வைத்திருக்கிறது.

உலகில் எந்த ஒரு வேதியியலாரும் செய்ய முடியாதவற்றை செல்கள் சாதாரணமாக செய்துகொண்டு இருக்கின்றன.

உயிர் முழுவதும் இந்த ஒற்றைச்செல்களை சார்ந்து தான் உள்ளது.

“ஒருமுறை புத்தரிடம், நீங்கள் உங்கள் உயிரை உணர்கிறீர்களா? என கேட்கப்பட்டபோது, உள்நோக்கி தியானித்துவிட்டு சொன்னாராம், “ஒவ்வொரு கணமும் என்னுள் கோடிக்கணக்கில் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறது” என்று.”

அடுத்த பதிவு: உடல் இயக்கம் பற்றி சுருக்கமாக காண்போம்


நன்றி...

  ©தியானம். Template by Dicas Blogger.

TOPO