Wednesday, June 23, 2010

தியானம் - 1

எல்லாருக்கும் ஒரு பெரிய வணக்கம். திரும்ப இந்த வலைப்பூ வழியா எல்லாரையும் சந்திக்கிறது மிக்க மகிழ்ச்சிங்க. ரொம்ப நாளா எதுவும் எழுதாம இருக்கியேன்னு தலைல கொட்டுன நல்ல உள்ளங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க.

ரொம்ப நாளா எல்லாரும் எதிர்பார்த்திருந்த ராவணன் ஜீரத்தில இருந்து மீண்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். இப்ப அத ஓவர்டேக் பண்ணி செம்மொழி மாநாடு ஆரம்பிச்சிருச்சு. எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க. எந்தவொரு மாநாடு, பண்டிகை, பொதுக்கூட்டத்துக்கு போனாலும் நேரம் இருந்தா, தவறாம விழா முடிஞ்ச அடுத்த நாளும் நான் அங்க ஆஜர் ஆயிடுவேன். அப்ப அந்த இடத்த பாத்தீங்கன்னா சும்மா போர் முடிஞ்ச யுத்த களம் எஃபெக்ட் அப்படியே இருக்கும். கொஞ்சம் அப்படியே காலார நடந்து போனிங்கன்னா வைங்க, என்னன்னமோ தோணும். :-)

சரி மேட்டருக்கு வருவோம்.

தியானம் பண்றதோட அடிப்படை என்ன? (அடிப்படையா தியானம்னா என்னான்னு கேக்குறவங்க எல்லாம் ஒன் ஸ்டெப் பேக்... உங்களுக்கு அப்பால கடைசியா சொல்றேன்). ஏதாவது சிக்கலான கேள்வி வந்துட்டா யாருக்கும் புரியாத ஜென் கதை சொல்லணும்னு, ஒலகத்தில இருக்குற எல்லா சாமியாருங்களுக்கும் தெரியும். நான் கொஞ்சம் புரியுற மாதிரி சொல்ல ட்ரை பண்றேன்.

ஒருநாள் ஒரு ஜென் குரு வகுப்பெடுத்துக்கிட்டு இருக்கும் போது, ஒரு இளம்துறவி அவர்கிட்ட இதே கேள்விய கேக்குறாரு. "எனக்கு ஒரு சந்தேகம் குருவே. தியானத்தினுடைய அடிப்படை என்பது என்ன?". அதுக்கு அவரு குரு சொன்ன பதில் 'கவனித்தல்'. நம்ம இளம் துறவிக்கு அந்த பதில் சரியாப் படல. அதனால திரும்ப கேக்குறாரு, "கவனித்தல் பற்றி நான் கேக்கவில்லை குருவே. தியானத்தின் அடிப்படையான அம்சம் பற்றித் தெரிந்து கொள்ளவே கேட்டேன்". இதற்கும் குரு சொன்ன பதில். "கவனித்தல், கவனித்தல் மற்றும் கவனித்தல். இதுதான் அடிப்படை அம்சம்".

நான் இந்த ஜென் கதையக் கேட்டப்ப, அந்த இளம் துறவி வகுப்ப கவனிக்காம வேற எதையோ யோசிச்சு கேள்வி கேட்டதாலதான் அந்த குரு கவனிக்குறதப் பத்தி சொல்றாறோன்னு தோணுச்சு. ஆனா உண்மையாவே தியானம் கவனிக்குறதுலதான் இருக்கு. ஆனா எதை கவனிப்பது?

"கண்னை மூடி உங்க மூச்சுக்காற்றை கவனிங்க". அப்புறம் "எதிரில் எரியும் விளக்கின் சுடரை கவனிங்க". எத்தனையோ யோகா வகுப்புகள்ல இதையேதான் திரும்பத்திரும்ப சொல்றாங்க. அதுக்கப்புறம் ஈசியா ஒன்னு சொல்வாங்க "மனதை ஒருநிலைப்படுத்துங்கள்". இவங்க இது இரண்டுக்கும் இடைல விடுற டைம் கேப்பு ரொம்ப கம்மி. நானும் பேக்கு மாதிரி அரை மணிநேரம் உக்காந்து கொஞ்சம் முதுகு வலியோட எத்தனையோ தடவை எழுந்திருச்சு வந்திருக்கேன். ஆனா அவங்க சொல்ல வர்ற "ஒருநிலைப்படுத்துதல்" பத்தி எனக்கு சுத்தமா ஒன்றும் புரியல.

பொதுவா தியானத்தில சொல்லப்படுற கவனித்தல் அப்படிங்கறது, நாம அப்ப இருக்கிற நிலையிலேயே ரொம்ப "நெருக்கமாக கவனித்தல்"னு பொருள்படும். இந்த நெருக்கமாக கவனித்தல் அப்படிங்கிறது வேற ஒன்னுமில்லை "உணர்தல்" தான் அது.

நமக்கும் இந்த உலகத்துக்கும் இருக்குற தொடர்பு நாம எதையாவது உணரும்போது தான் புரிய ஆரம்பிக்குது. உதாரணமா நாம கண்னைத் திறந்து பார்த்தாதான் எதிர்ல இருக்குற பிகர் தெரியும். உண்மையாகவே நாம அதை பார்க்கல. நம்ம கண்ணுதான் அத உணருது. வெளிய இருக்குற மொத்த வெளிச்சமும் நம்ம கண்ணுக்குள்ள பிரதிபலிச்சு அதை கண்ணு உள் வாங்கி நாம ஒரு காட்சியா பாக்குறோம். ஆனா நமக்கு அதுல பர்டிகுலர் பிகர் மட்டும் தெரியுதுன்னா அதை நாம உணர்றோம். (இங்க பிகர் அப்படிங்கிறத தப்பா நினைச்சவங்க எல்லாம் தலைல கொட்டிக்குங்க... இது, அது இல்ல...). ஏறக்குறைய இது ஒரு "நெருக்கமாக கவனித்தல்" போன்ற செயல்.

சுருக்கமா ஐம்புலன்கள்தான் நாம இந்த உலகத்தோட கொண்டிருக்கிற தொடர்பு. கண், காது, மூக்கு, நாக்கு அப்புறம் உடல் (இது தோல்பகுதி மட்டும்தான்). இந்த ஐந்து புலன்கள், எல்லா உயிர்களுக்கும் இருக்கு, ஆறாவதா எக்ஸ்ட்ரா ஒன்னு நமக்கு இருக்குறது மனசுதான். இப்போ நீங்க ஒரு பொருளப் பாத்தீங்கன்னா அத உங்களோட ஈசியா தொடர்பு பண்ணிப் பாக்குறது மனசுதான். உடனே உங்களுக்கு அது பத்தின நிறைய விசயங்கள் ஞாபகத்துக்கு வரும். ஒரு சத்தம் கேட்டீங்கன்னா அத உடனே ஏற்கனவே நீங்க கேட்ட சத்தங்களோட தொடர்பு படுத்திப் பார்க்குறது மனசுதான். அரைநொடி கூட இல்லாத வேகத்துல உங்க மனசு அது என்ன சத்தம்னு சொல்லிடுது.

இந்த புலன்கள் மூலமா நீங்க உணர்வது எல்லாமே சின்ன வயசுல இருந்து சாதாரணமா டெவலப் ஆன ஒன்னு. இதுதான் நமக்கு Presence of Mind உருவாக்குது. சாதாரணமா நீங்க உணர்றது எல்லாத்தையுமே மூளைல ரெக்கார்ட் பண்ணிகிட்டே போறது Receptive State of Mind மூலமாத்தான். நாம எல்லாத்தையுமே ஆழமாக உணர்வது இல்லை. இப்போ உங்களோட கல்யாண தேதிய யாராவது கேட்டா உடனே சொல்லிடுவீங்க. நீங்க முதன்முதலா யூஸ் பண்ண மொபைல் நெம்பர் என்னன்னு கேட்டா யோசிப்பீங்க. உங்களுக்கு ரெண்டுமே தெரியும் ஆனா ஆரம்ப நிலை பதிவாகத்தான் மொபைல் நெம்பர் உங்க மனசுல பதிஞ்சிருக்கும். அதனாலதான் நெம்பர யோசிச்சு சொல்வீங்க.

மனசப் பத்தி சொல்லணும்னா இன்னும் நிறைய சொல்லலாங்க. நீங்க கடைசியா பச்சமூங்கில் மரத்தப் பத்தி எப்ப நினைச்சீங்கன்னு உங்களால சரியா சொல்ல முடியாது. ஆனால் நீங்க இன்னும் ஒரு மணிநேரத்துக்கு பச்சமூங்கில்மரத்த நினைக்கக் கூடாதுன்னு நான் சொன்னா... நினைக்காம இருக்க முடியுங்களா?... இந்த நேரத்துல உங்க பின் மண்டைல உங்க கூட வேலை செய்யுற ஒருத்தரு நங்குன்னு கொட்டுனா, அவர் கூட சண்டை போட்டுகிட்டே நிச்சயமா பச்சமூங்கில் மரத்த மறந்துடுவீங்க.:-)

சரி....

தியானம்னா நெருக்கமாக கவனித்தல்னு ஒருவிதமா ஏறக்குறைய புரிஞ்சிகிட்டு இருப்பிங்கன்னு நினைக்கிறேன். எதை கவனிக்குறது? ஏன் கவனிக்குறதுன்னு எல்லாம் அடுத்தடுத்த பதிவுல பாக்கலாம்.

தியானம்னா என்னான்னு கேட்டவங்களுக்கு...

அதாவது சாமி.... தியானம்னா ஒரு வகையில ஆழம் பாக்குறதுதான். நம்ம பாடில இருக்குற பார்ட்சுங்களுக்கு அதோட வேலைய விட நிறைய வேலை தெரியும். ஆனா நம்ம மனசுதான் அதை கவனிக்குறது இல்லை. அத கவனிக்க வைக்குறதுக்குதான் தியானம். ஏறக்குறைய உண்மையான ஆழம் யாருக்கும் இன்னும் தெரியாது. நாமும் கொஞ்சம் காலை விட்டுப் பாப்போமே. அப்புறம் மனசை ஒருநிலைப்படுத்துறது, குவிக்கிறது, கவுக்குறது... இதுக்கெல்லாம் அப்பால இன்னும் நிறைய மேட்டர் இருக்குதாம். காசா... பணமா... அதையும் பாக்கலாம்... 


நன்றி...

  ©தியானம். Template by Dicas Blogger.

TOPO